வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 16 இலட்சத்து 33 ஆயிரம் ரூபா தண்டம் அறவீடு
வவுனியா மாவட்டத்தில் இவ் வருடம் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 16 இலட்சத்து 33 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி அ.லெ.ஜெஃபர்ஷாதிக் தெரிவித்தார்.
வவுனியாவில் நுகர்வோர் சட்டத்தை மீறியமை தொடர்பாக வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் இவ் வருடத்தில் பல சுற்றி வளைப்புகளையும், சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தோம். இவ் வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 322 வழக்குகள் பிடிக்கப்பட்டுள்ளதுடன் 292 வழக்குகள் பதியப்பட்டு 16,33,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மாதம் 48 வழக்குகள் பிடிக்கப்பட்டு 37 வழக்குகள் பதியப்பட்டதுடன், 1,51,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்குகளில் நுகர்வோர் சட்டத்தை மீறிய காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைபத்திரத்தை காடசிப்படுத்தாது பொருட்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களை பதுக்கி வைத்திருந்தமை போன்ற பல்வேறு செயற்பாடுகளிற்காக பிடிக்கப்பட்டுள்ளதாகவும், பழைய பொருட்களுக்கு விலையை மாற்றம் செய்து விற்பனை செய்தமை தற்காலத்தில் அதிக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.
No comments