Breaking News

நாட்டில் தொடரும் மழை : அனர்த்தங்களில் இருவர் பலி l ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டை அண்மித்த கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமையினால், வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடை கடும் மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளிலேயே மழையுடனான வானிலையை எதிர்பார்க்க முடியும் எனவும் திணைக்களம் தெரிவிக்கின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் சுமார் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
இதேவேளை, கடும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் 477 குடும்பங்களைச் சேர்ந்த 1912 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

அதேபோன்று, புத்தளம் மாவட்டத்தில் 646 குடும்பங்களைச் சேர்ந்த 2664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவிலும் மரணமொன்று பதிவாகியுள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் 1273 குடும்பங்களைச் சேர்ந்த 5119 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறுகின்றது.

No comments