உங்கள் மாவட்டத்தில் ஒமிக்ரோன் பரவியுள்ளதா? - இரு மடங்காக அதிகரித்தது கொவிட்
இலங்கையின் 6 மாவட்டங்களிலிருந்தே, புதிதாக ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.
இதன்படி, கொழும்பு, கண்டி, காலி, கம்பஹா, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே புதிய ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் ஏற்கனவே, களுத்துறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்டிருந்ததாக பதிவாகியிருந்தது.
இலங்கையில் மிக வேகமாக பரவும் வைரஸ் தொற்றாக ஒமிக்ரோன் தொற்று தற்போது வலுவடைந்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைக்கப் பெற்ற 182 மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்கு முன்பு 30 கொவிட் 19 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அது தற்போது 60 நோயாளர்களை எட்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. (Vavuniyan)
No comments