Breaking News

திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கிணற்றுக்குள் வீழ்ந்ததில் 13 பேர் மரணம்


திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கிணற்றுக்குள் வீழ்ந்ததில் 13 பேர் மரணமான சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள, குஷிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

குஷிநகர், நெபுவா நவுராங்கியா பிரதேசத்தில் நேற்றிரவு 8.30 மணி அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் 7 பெண்களும், ஒரு வயது குழந்தை மற்றும் 10 வயது சிறுமியொருவர் உட்பட 6 சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், அங்கிருந்த கிணற்றின் மேல் இடப்பட்டிருந்த கொங்ரீட் தளத்தின் மீது நின்றுகொண்டிருந்த போது, பாரம் தாங்க முடியாமல் அது உடைந்து வீழ்ந்ததில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கிணற்றுக்குள் வீழ்ந்த 13 பேரும் உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் ஏற்பட்ட விபத்தை அறிந்து மனவேதனை அடைந்தேன். 

உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார். (Vavuniyan) 

No comments