Breaking News

கோதுமை மாவிற்கு 25-35 வீத தட்டுப்பாடு – மக்கள் அசௌகரியத்தில்


நாட்டின் மாதாந்த மொத்த கேள்வியில் 25 முதல் 35 வீதமான கோதுமை மாவிற்கு தற்போது தட்டுப்பாடு நிலவி வருவதாக உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக, பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கோதுமை மாவிற்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அந்த சங்கம் கோரியுள்ளது.

இலங்கையின் மாதாந்த கோதுமை மா தேவையானது, 75,000 மெற்றிக் தொன் என கணிப்பிடப்பட்டுள்ளது

நாடு எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி பிரச்சினை காரணமாக, கோதுமை மா இறக்குமதிக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதனால், கேள்விக்கு ஏற்ப கோதுமை மாவை, நிறுவனங்களினால் விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாதாந்தம் 18,000 முதல் 26,000 மெற்றிக் தொன் வரை, கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றமை உறுதியாகியுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 87 ரூபாவாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் தற்போதைய சந்தை விலை 145 ரூபாவாக காணப்படுகின்றது.

கோதுமை மாவிற்கு காணப்பட்ட கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் மீளப் பெற்றுக்கொண்ட நிலையிலேயே, கோதுமை மாவிற்கான விலை தற்போது அதிகரித்துள்ளது.

கோதுமை மாவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், சந்தையில் கோதுமை மாவிற்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருவதாக நுகர்வோர் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் ஒரு மாதத்திற்கும் அதிக காலம் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதனால், பேக்கரி உரிமையாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலைகள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ள நிலையில், கோதுமை மாவின் விலையும் அதற்கு ஏற்ற வகையில் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 


No comments