வவுனியா தம்பனைபுளியங்குளத்தில் விபத்து - ஒருவர் பலி (02ம் இணைப்பு)
வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் பாரதிபுரம் 50 வீட்டுத் திட்ட சந்திக்கு அண்மையில் உள்ள தம்பனைப் புளியங்குளம் பகுதியில் இன்று (11.03) மதியம் குறித்த விபத்து இடம்பெற்றது.
இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா- நெளுக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பெண் ஒருவரின் மோட்டர் சைக்கிள் ஒன்று பாரதிபுரம் 50 வீட்டுதிட்ட சந்திக்கு அண்மித்த தம்பனை புளியங்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த முதியவர் ஒருவரின் மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, குறித்த விபத்துக்குள்ளான முதியவர் மீது வீதியால் வந்த பிறிதொரு வாகனம் மோதிச் சென்றமையால் அவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறிப் பலியானார். குறித்த விபத்ததுடன் சம்மந்தப்பட்ட வாகனம் குறித்த பகுதியில் இருந்து சென்றுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் நெளுக்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், தடவியல் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தர்மராஜா என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், எதிர் திசையில் பயணித்த மோட்டர் சைக்கிள் சாரதியான பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது மரணித்த முதியவரின் பின்னால் இராணுவத்தினரது வாகனம் ஒன்று வந்ததாகவும், விபத்து இடம்பெற்ற பகுதியில் பாரிய சத்தம் கேட்டதாகவும், இராணுவத்தினரது வாகனம் நிறுத்தி விட்டு, பின்னர் உடனடியாக அங்கிருந்து குறித்த வாகனம் சென்று விட்டதாகவும் விபத்து இடம்பெற்ற பகுதியில் நின்ற மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post Comment
No comments