Breaking News

13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிரான கிட்டு பூங்கா பிரகடனத்தை வலுப்படுத்த வவுனியாவில் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்: கஜேந்திரன் எம்.பி


ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான கிட்டு பூங்கா பிரகடனத்தை வலுப்படுத்த வவுனியாவில் தமிழ் மக்கள் அணி திரள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று இரவு (12.03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கான சமஸ்டி தீர்வை வலியுறுத்தும் வகையில் நாளை 13 ஆம் திகதி வவுனியாவில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற பேரணியின் போது பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த பிரகடனத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாகவும், அதனை மீள உறுதிப்படுத்தும் விதமாகவும் வவுனியா பேரணி நடைபெற இருக்கின்றது. அதற்காக கடந்த ஒரு வாரமாக வவுனியா மாவட்டத்தில் கிராமம் கிராமமாக சென்று மக்கள் மத்தியில் விழிப்புர்ணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கைக்கு ஒரு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட இருக்கின்றது. கோட்டபாய ராஜபக்ஸ அதற்காக நியமித்த நிபுணர் குழு அந்த அரசியல் யாப்பு பணிகளை நிறைவு செய்திருக்கிறது. அந்த அரசியலமைப்பானது முன்னர் இருந்ததை விட சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் ஒரு ஒற்றையாட்சி  அரசியல் யாப்பாக வரவுள்ள நிலையில், அதனை அடியோடு நிராகரித்து  தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஸ்டி தீர்வை வலியுறுத்த வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.

இதனை செய்வதை விடுத்து கொண்டு வரப்படும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை நியாயப்படுத்தும் விதமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருகக்க கூடிய தரப்புக்களும், விக்கினேஸ்வரனும் இணைந்து கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்கள். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அதில் கோரியிருந்தார்கள். அதனை சாட்டாக வைத்து வரவிருக்கும் புதிய அரசியலமைப்பை ஆதரிக்க தயாராகி வருகிறார்கள். அது நடைபெறுமாக இருந்தால் 74 வருடங்களில் முதல் தடவையாக தமிழர்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டதாக அமைந்து விடும்.

தமிழர்கள் இத்தனை ஆண்டுகளாக செய்த தியாகங்கள், அனைத்தையும் வீணடிப்பதாக அமையும். குறிப்பாக முள்ளியவாய்கால் வரை மிகப்பெரிய உயிர்தியாகம் நடைபெற்றிருக்கிறது. அந்த உயிர்தியாகங்கள் அனைத்தும் ஒற்றையாட்சியை நிராகரித்து 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மகாண சபையை நிராகரித்து ஒரு தேச அங்கீகாரத்தை கோரி நடைபெற்ற ஒரு போராட்டம்.

இந்த தியாகங்களுக்கு பின்னர் இந்திய அரசினது பிராந்திய நலன்களுக்காக தமிழர்களது நலன்களைப் பாதிக்கும் வகையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முயல்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே 13 ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வுக்கான ஒரு தொடக்கபர் புள்ளியாகவோ அல்லது தீர்வாகவோ ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை அடியோடு நிராகரிக்க வேண்டும். தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஸ்டி தீர்வுக்காக அனைத்து தமிழர்களும் அணி திரள வேண்டும். அத்தோடு தாயகத்தில் இடம்பெறும் சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல்  எனடபவற்றுக்கு எதிராகவும், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமால் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணை, இனவழிப்புக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக இந்த பேரணி இடம்பெறவுள்ளது.

ஆகவே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக உள்ள மாவீரன் பண்டார வன்னியன் சிலை முன்பாக பேரணி ஆரம்பமாகிறது. அங்கிருந்து ஏ9 வீதியில் ஊர்வலமாக சென்று தாண்டிக்குளம் புகையிரத நிலையம் முன்பாக உள்ள ஐயனார் விளையாட்டுக் கழக மைதானத்தில் கூட்டம் இடம்பெறும். இதில் தமிழ் மக்கள் உரிமைக்காக திரண்டு வந்து ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து உரிமைக் குரலை வலுப்படுத்த வேண்டும் எனக் கோருகின்றேன் எனத் தெரிவித்தார். 

No comments