வவுனியா மாவட்டத்தல் 87 இலட்சத்து 45 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்படும் - இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் யோ.நிசாந்தன்
வவுனியா மாவட்டத்தல் 87 இலட்சத்து நாற்பத்தையாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட உள்ளதாக இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் யோ.நிசாந்தன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களில் நன்னீர் மீன் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் வருடா வருடம் விடப்படும் மீன்குஞ்சுகள் தொடர்பாக கேட்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் 2022ம் ஆண்டுக்காக 87 இலட்சத்து நாற்பத்தையாயிரம் மீன் குஞ்சுகள் விடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிலாப்பி, றோகு, கட்லா, மிரிகல் என தரமான இனமான மீன் குஞ்சுளே; எமது அதிகார சபையின் மூலம் இங்குள்ள குளங்களில் விடப்படுகின்றது.
2022 ஜனவரி தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதியில் கமநல அபிவருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 32 குளங்களில் ஐந்து இலட்சம் மீன் குஞ்சுகள் விட்டுள்ளோம். மேலும் இத்திணைக்களம் மற்றும் விவசாய அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் ஏனைய குளங்களிலும் மீன் குஞ்சுகளை விடுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஏப்ரல் மாதம் தொடக்கம் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள பாவற்குளம், உலுக்குளம் அடங்கலாக 19 பெரிய நீர்ப்பாசன குளங்களில் மீன்குஞ்சுகளை விடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
No comments