Breaking News

தீவிர தாக்குதலை நடத்த ரஷ்ய படையினர் திட்டம்


உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்னும் ஒரு சில தினங்களில் ரஷ்ய படையினர் தீவிர தாக்குதல்களை நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் படையினரின் தீவிரமான பதில் தாக்குதல்கள் காரணமாக பின்னடைவை எதிர்நோக்கியிருந்த ரஷ்ய படையினர், தற்போது தலைநகர் கீவ்வின் வட மேற்கு பிராந்தியத்தில் மீள் ஒருங்கிணைந்து வரும் நிலையில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான தமது படை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ள ரஷ்யா, புதிய நகரங்களை இலக்குவைத்தும் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது இன்று 17 ஆவது நாளாகவும் ரஷ்யா, தனது படை நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், புதிய நகரங்கள் மீது ரஷ்யா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் வட மேற்கில் உள்ள லுட்ஸ்க் நகரிலும் மத்திய கிழக்கு உக்ரைனில் உள்ள டினிப்ரோ நகரம் மீதும் ரஷ்யா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

லுட்ஸ்க் நகரில் உள்ள விமானநிலையம் மற்றும் ஜெட் பழுதுபார்க்கும் தொழிற்சாலையை இலக்குவைத்து ரஷ்யா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டினிப்ரோ நகரம் மீதான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், தாக்குதல் காரணமாக ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் நகரிலும் ரஷ்யா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதுடன், இந்த தாக்குதல்கள் இராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. (Vavuniyan) 

No comments