பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க எதிரணி பேராதரவு
நிறைவேற்று அதிகாரத்தை வழங்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீதித்துறையின் சுயாதீனத்தை அவமதிக்கும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"அரசியலமைப்பு மற்றும் பொதுச் சட்டத்தினால் சட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறித்து, நிறைவேற்று அதிகாரத்திற்கு தேவையற்ற அதிகாரங்களை வழங்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தை அவமதிப்பதாக நாங்கள் நம்புகிறோம்."
இந்த மாத ஆரம்பத்தில், அரசாங்கத்தால் திருத்தப்பட்டதாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் வேலைத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த மாத ஆரம்பத்தில் ஆரம்பித்திருந்தது.
குறித்த மனுவில் கையொப்பமிடும் நிகழ்வு கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி முல்லைத்தீவு ஊடக மையத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
அன்று தொடக்கம் கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, மன்னார், நீர்கொழும்பு, ஹட்டன் ஆகிய பகுதிகளில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
பொதுமக்களுக்கு மேலதிகமாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பல அரசியல் கட்சிகள், மத மற்றும் வெகுஜன அமைப்புக்கள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், பயங்கரவாதச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை முற்றாக நிராகரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், அதற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பையும் மக்களின் சுதந்திரத்தையும் சமநிலைப்படுத்தும் சட்டமூலமொன்றே அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.(Vavuniyan)
No comments