இடைக்கால அரசாங்கத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம். அன்ரனி ஜேசுதாசன்
இடைக்கால அரசாங்கம் ஒன்றினை உருவாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதுவரை நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய ஏற்பாட்டாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்தார்.
இன்று ( 26) வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்சார் சமூகங்கள் பலவிதமான இன்னல்களை சந்திக்கின்றன. இந்த நாட்டில் தொடர்ச்சியாக ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர். ஏழை மக்களின் அதாவது தொழிலாளர் வர்க்கத்தின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் ரீதியில் அவர்களை உயர்த்துவதற்கு ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்மும் இதுவரை சரியான முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நாடு இன்றைய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதற்கான காரணம் கோட்பாய ஜனாதிபதி உட்பட மகிந்த ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் பிரதமராக இருந்த போது தமது நண்பர்கள், உறவினர்களை பாதுகாப்பதற்காக வழங்கிய வரிச்சலுகையே காரணம். பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க வந்தவுடன் இந்த பிரச்சினைகளுக்கு ஒரு வகையில் தீர்வு வரும் என்று பலர் நம்பிய போதும் அவரும் ஏழைகள் மீதே வரிச்சுமையை சுமத்தினார்.
இதனால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவது தொழிலாளர் சமூகமே. விவசாயிகள் பசளை இல்லாமல் விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் இன்று மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு கடனாளிகளாக மாறியுள்ளனர். இதனால் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ள அதேவேளை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு பொருட்களின் விலையேற்றம் அதிகரித்துள்ளது.
மீனவர்களுக்கு எண்ணெய் கிடைக்காமல் தொழிலை இழந்துள்ள அதேவேளை நாளுக்கு நாள் கடனாளிகளாக மாறிக்கொண்டு வருகின்றனர். கடற்றொழில் அதிகாரிகள் கண்டும் காணதவர்கள் போல் பல சாக்குபோக்குகளை கூறி வருகின்றனர்.
மீனவர்கள் தொழிலில் ஈடுபடாமையினால் மீன் உற்பத்தி மிகக் குறைவு. இதனால் மீனின் விலை மிக அதிகரித்துள்ளது. இதனால் நுகர்வாளர்கள் பாதிக்கப்படுகின்ற அதேவேளை மீனவர்களுக்கும் கூட உணவுக்கு மீன் இல்லை. ஒரு டின் மீனின் (மீன் டப்பா) விலை 700 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
பெருந்தோட்டத்துறை மக்கள் (மலையக மக்கள்) எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டு தமது பிள்ளைகளுக்கு ஒரு நேர உணவைக்கூட கொடுப்பதற்கு அவதிப்படுகின்றனர். அன்றாடம் கூலித் தொழிலுக்கு சென்றவர்களுக்கு இன்று தனியார் தோட்டங்களில் தொழில் கிடைக்காமையினால் அவர்களின் குடும்பங்கள் பலவிதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
உணவகங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளில் தொழிலில் ஈடுபட்ட இளைஞர்கள் சமையல் எரிவாயு இல்லாத காரணத்தினால் இன்று தமது தொழில்களை இழந்து மிகவும் விரக்தியடைந்துள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலைகளிலே தொழில்புரியும் இளம் பெண்கள் சரியான போக்குவரத்து இன்மையால் பாதிக்கப்படுகின்ற அதேவேளை தொழிலுக்கு செல்ல முடியவில்லை தொழில் முடிய நேரத்துக்கு தங்களின் இருப்பிடங்களுக்கு வர முடியாமல் இரவு நேரங்களில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.
இதனடிப்படையில் பார்க்கின்ற போது ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தொழிலாளர் சமூகம் சொல்லொன்னா துன்பங்களை அனுபவிக்கின்றனர். எனவே அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு என்ற வகையிலே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு சில கோரிக்கைகளை முன் வைக்கின்றோம். இலங்கை நாட்டில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்துக்கு அமைவாக ஜனாபதி கோட்டாபய பதவி விலக வேண்டும்.
பல ஊழல்களில் ஈடுபட்டவர்களை கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகி இடைக்கால அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். நாளுக்கு நாள் நாடு அபாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றமையினால் ஒட்டுமொத்த பாராளுமன்றமும் இணைந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது தெளிவாக புலப்படுகிறது.
அகிம்சை வழி போராட்டங்களிலே ஈடுபடுகின்ற இளைஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை கைது செய்து தடுத்து வைப்பதை முழுமையாக கண்டிப்பதோடு அவர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டும். அரசு பதவி விலகும் வரைக்கும் தொழிலாளர்களில் அதிக கவனம் செலுத்தி அவர்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும்.
மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான எரிபொருளை உரிய முறையில் வழங்க நடிவடிக்கை மேற்கொள்வதோடு, விவசாயிகள் தங்கள் விவசாயத்தை மேற்கொள்வதற்கு உடனடியாக பசளைகளை வழங்க வேண்டும்.
இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து பல மில்லியன் தொகைக்கான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. எனினும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவைகள் சென்றடையவில்லை. ஏழைகள் மற்றும் பெருந்தோட்ட மக்களுக்கு இதனால் உரிய பயன் கிடைக்கவில்லை. எனவே இவைகள் யாருக்கு சென்றடைகின்றன என்பதை கண்காணிப்பு செய்வதற்கான குழு ஒன்றை நியமிக்க வேண்டும்.
இலங்கை நாட்டுக்கு கிடைக்கின்ற பல நிவாரணங்கள் அல்லது உதவித் தொகைகளை வழங்குகின்ற போது சமுர்த்தி பயனாளிகளுக்கே வழங்கப்படுகின்றன. இந்த நாட்டில் உண்மையான சமுர்த்தி பயனாளிகள் எத்தனைப் பேர் உள்ளனர் என்பது கேள்விக்குறி. சமுர்த்தி கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்காமல் வசதி படைத்த பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக மேலான கவனத்தை செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எமது கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக இடைக்கால அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த அரசாங்கம் இடைக்கால செயற்றிட்டம் ஒன்றை மேற்கொண்டு மேல் கூறப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 6 மாதத்துக்குப் பின் பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.
அதுவரை நாம் தொடர்ந்து குரல் கொடுப்பதோடு, புதிய அரசு ஆட்சியமைக்கும் பட்சத்தில் புதிய முன்மொழிவுகளை முன் வைப்போம் என்றார்.
குறித்த ஊடக சந்திப்பில் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பினுடைய தேசிய ஏற்பாட்டாளர் அன்டனி ஜேசுதாஸன் , தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்ரமணியம், தலைவர் ந.தேவகிருஷ்ணன், நிர்வாக உறுப்பினர் வ.நவரஞ்சிதமணி மற்றும் ச. வேதநாயகம் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்
No comments