ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இருந்தும் வழங்கப்படவில்லை என மக்கள் குற்றச்சாட்டு.
வவுனியா ஓமந்தை எரிபொருள் நிலையத்தில் நேற்று (19) அதிகாலை தொடக்கம் மக்கள் பெற்றோல் நிரப்புவதற்காக வாகனங்களுடன் சுமார் 3km தூரம் வரை வரிசையில் காத்திருந்திருக்கின்றார்கள். IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் காலை 9 மணிக்கு பின்னர் பெற்றோல் அடிக்க தொடங்கி குறிப்பிட்ட நேரத்தின் பின் பெற்றோல் முடிந்துவிட்டது என நிறுத்தியிருக்கின்றார்கள். இதனாலே அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் பெற்றோலை வைத்துக்கொண்டு பெற்றோல் முடிந்துவிட்டது என கூறி தம்மை அலட்சியப்படுத்துவதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்ததோடு குறித்த எரிபொருள் நிலையத்தில் குழப்ப நிலை ஏற்பட்டு மக்கள் ஏ9 வீதியினை மறித்து சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
இதனால் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. பின்னர் குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரினால் பெற்றோல் பெற்று தருவதாக கூறப்பட்டு குறித்த போராட்டம் மக்களால் கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை தொடக்கம் குறித்த எரிபொருள் நிலையத்தில் மக்கள் எரிபொருளுக்காக இன்று பிற்பகல் வரை காத்திருந்தும் இதுவரை எரிபொருள் வழங்கப்படவில்லை என எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த நாட்களில் மாலை 5.20 மணியுடன் எரிபொருள் முடிவடைந்துள்ளதாக கூறி மக்களை திருப்பியனுப்புவதும் இதனால் மக்கள் வீதியை மறித்து போராட்டம் நடததுவதும்பி பின்னர் மறுநாள் காலை எரிபொருள் வழங்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதுவே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடாக இருந்து வருகின்றது என்றும் மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும், பாவனையாளர் அதிகார சபையினருக்கும் தகவல் வழங்கப்பட்டும் இதுவரை அவர்கள் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் கூறியுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் மாவட்ட இணைப்பு அதிகாரி ஜெ.ஷாதிக் அவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது,
எங்களுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதைடுத்து இன்று (20.06) நேரடியாக கள விஜயம் மேற்கொண்டிருந்தோம். அங்கு சென்ற போது காரியாலயம் பூட்டப்பட்டு முகாமையாளரோ அல்லது அங்கு பணியாற்றும் ஊழியர்களோ யாரும் இருக்காததன் காரணமாக பரிசோதனைக்குட்படுத்த முடியவில்லை. பெற்றோல் இருப்பதாகவே அவ்விடத்தில் நின்ற பொதுமக்களின் கருத்து அமைந்திருந்தது. இவ்விடயம் குறித்து பரிசோதனை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் ஓமந்தை பொலிஸாரால் எரிபொருள் நிலையத்தினுடைய முகாமையாளருக்கும், IOC பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் குறித்த விடயத்தினை பரிசோதனைக்குட்படுத்துமாறு கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
No comments