Breaking News

வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரசாங்க அறிவுறுத்தலை மீறி எரிபொருள் விநியோகம்

வவுனியா பலநோக்கு கூட்டுறுவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரசாங்க அறிவுறுத்தல்களை மீறி எரிபொருள் விநியோகம் இடம்பெற்றமையால், அங்கு குழப்பம் ஏற்பட்ட நிலையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பதிவை இடைநிறுத்திச் சென்றனர்.  

அரசாங்க அறிவுறுத்தல்களை மீறி இன்று (21.07) எரிபொருள் விநியோகம் இடம்பெற்ற போது ஒன்லைன் பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய போதும், அவர்கள் அதனை மீறி செயற்பட்டமையால் தமது கடமையை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர்.

அத்துடன் அரசாங்கம் இன்றைய தினம் (21.07) 3,4,5 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் குறித்த இலக்கங்களையுடைய வாகனங்கள் காலை முதல் வரிசையில் நின்றன. எனினும் எரிபொருள் வர தாமதமாகியமையால் மாலையில் இருந்து எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது குறித்த இலக்கங்கள் தவிர்ந்த 0, 8 இலக்க சொகுசு கார்கள், வேறு இலக்க மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்டதுடன், அறிவுறுத்தல் வழஙகப்பட்ட அளவை விட அதிகமாகவும் எரிபொருள் நிரப்பட்டது.

குறிப்பாக மக்கள் வங்கியின் வன்னிப் பிராந்திய முகாமையாளருக்கு சொந்தமான கார் ஒன்றிற்கு 14 ஆயயிரம் ரூபாய்க்கு மேல் எரிபொருள் வழங்கப்பட்டதுடன், பிறிதொரு அரச திணைக்களத்திற்கு சொந்தமான காரும் வரிசையின்றி எரிபொருள் பெற்றுச் சென்றது.  இதனால் அங்கு நீண்ட வரிசையில் நின்ற மக்கள் நீதியாக செயற்படும் படி எரிபொருள் நிரப்பு நிலையத்தினருடன் முரண்பட்டமையால் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை, வவுனியா மக்கள் வங்கியினர் நேற்றைய தினம் (21.07) வவுனியா ஐஓசி எரிபொருள் நிலையம் ஒன்றிலும் கலன்களில் பெற்றோல் பெற்றுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments