Breaking News

மாவட்ட எரிபொருள் நெருக்கடி மற்றும் பங்கீடு தொடர்பில் அவசர ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

வவுனியா மாவட்ட எரிபொருள் நெருக்கடி மற்றும் பங்கீடு தொடர்பில் மக்களுக்கு இலகுவான பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்தும் நோக்கில் அவசர ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றதுடன், அதில் எரிபொருள் அட்டை விநியோகிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர ஆகியோரின் இணைத் தலைமையில் குறித்த கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (07.07) காலை இடம்பெற்றது.

இதில் திணைக்கள தலைவர்கள், சங்கங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்'ராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாவட்டத்தில் எரிபொருள் நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதற்கு கறுப்பு சந்தை விற்பனையே காரணம்  எனவும் இதன் காரணமாக மாவட்டத்திற்கு கிடைக்கும் பெற்றோல் எரிபொருளை சரியான முறையில் பங்கீடு செய்வது தொடாபில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் இறுதியில், பெற்றோல் பெறுவதற்கு பிரதேச செயலகங்கள் கிராம அலுவலர் ஊடாக எரிபொருள் அட்டை ஒன்றினை முதல் கட்டமாக குடும்பத்திற்கு ஒன்று வீதம் வழங்கி நடைமுறைப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்திருந்தார்.

சிறுபோக அறுவடை ஆரம்பமாகியுள்ளமையால் அறுவடைக்கு தேவையான டீசல் எரிபொருளை இ.போ.சபை ஊடாக பெற்றுக் கொடுப்பதற்கும், விவசாய அறுவடைக்கு முன்னுரிமை அடிப்படையில் டீசலை வழங்குவதற்கும், கனரக வாகனங்களுக்கான டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த எரிபொருள் அட்டை விநியோகம் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் காணப்படும் நீண்ட வரிசை மற்றும் தேவையற்ற அலைச்சல்களையும், கறுப்பு சந்தை வியாபாரத்தையும் கட்டுப்படுத்த முடியும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

No comments