இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கு இன்று வேட்பு மனு: நாளை வாக்கெடுப்பு
நாட்டு மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறியிருந்த கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி இருப்பதால் இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்றத்தில் நாளை (20) இரகசிய வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிற பாராளுமன்ற உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் பாராளுமன்றம் இன்று (19) கூடவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் வேட்புமனுக்களை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்ற செயலாளர் நாயகம் இன்று தெரிவத்தாட்சி அதிகாரியாக செயற்படுவார். ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை தெரிவத்தாட்சி அதிகாரியாக செயல்படும் பாராளுமன்றச் செயலாளர் நாயகம், அறிவிக்க வேண்டும். இதனை மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் வழிமொழிவார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் ஈடுபட முடியாது.
இன்றைய தினம் ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் மாத்திரம் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தால், அந்த நபர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். எனினும், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாளைய தினம் (20) ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெறும்.
இதேவேளை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.
மேலும் ஏனைய பாராளுமன்ற அமர்வுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட கூடுதலான பாதுகாப்பு இன்றும், நாளையும் பாராளுமன்றத்துக்கு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்குச் செல்லும் வழிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
No comments