தமிழர் விவகாரத்தை வைத்து 'குரங்கு வித்தை காட்டும்' சர்வதேசம்! - மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ்
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் விழித்துக் கொள்ளாவிடில் 'தமிழ்த் தேசிய வியாபாரிகள் தமிழ்த் தேசியத்திற்கு சமாதி கட்டிவிடுவர்.
தமிழா விழித்தெழு! ஜநா மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் அறிக்கை வெளிவந்துள்ளது. வழமைபோல் தமிழர்களுக்கு சாதகமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்புகள் ஒன்றும் தமிழ் மக்கள் மீதான அக்கறையில் அனுதாபத்தில் பிறக்கவில்லை. தமிழ் மக்களை தமிழர் விவகாரத்தை வைத்து 'குரங்கு வித்தை காட்டும்' சாவதேச சக்திகளான 'குரங்காட்டிக்காரர்களின்' மொழியில் பிறந்த கதையாகும்.
இதனை அடுத்து ஜநா மனித உரிமை பேரவையின் முழுமையான அறிக்கை வரும். அதற்கு எதிராக சீனா பாகிஸ்தான் ரஸ்யா என இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அணிவகுத்து நிற்கும் வழமைபோல் இந்தியா ஒரு அறிக்கையுடன் 'நடு நிலை' வகிக்கும் அல்லது அறிக்கைவிடும்.
இந்தியா உட்பட சர்வதேச சக்திகளுக்கு இலங்கை அரசாங்கமும் சிங்கள மக்களுமே தேவை. அந்தளவுக்கு இந்தியா மற்றும் சர்வதேச சக்திகளின் தத்தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கும் அவர்களுக்கு இடையிலான கூட்டு நலன்களுக்கும் ஏற்ப தமிழர் விவகாரத்தைக் கையாண்டு வருகின்றன.
இந்தியா உட்பட சர்வதேச சக்திகளின் இத்தகைய நகர்வுகளை சரியாக எடைபோட்டுள்ள இலங்கையில் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் இதற்கு ஏற்றாற்போல் காய்களை நகர்த்திக் கொள்கின்றன. இதனாலேயே இலங்கை சர்வதேச அரங்கில் வீழ்ந்ததாக நினைக்கும் போதெல்லாம் அது மீண்டெழுந்ததே வரலாறாக உள்ளது. ஆனால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் வீழ்த்தப்பட்டதாகவே வரலாறு உள்ளது.
தமிழர்தரப்பு
அடுத்த கூட்டத் தொடர்வரை தமிழர் தரப்பு இதுபற்றி பேசிக் கொண்டிருக்கும். அதற்குள் தமிழ்த் தலைமைகளும் புலம்பெயர் அமைப்புக்களும் மனித உரிமைப் பேரவையின் 'கடும் போக்கு' அல்லது கனதியான அறிக்கைக்கு தாமே காரணமென தமிழ் மக்களுக்குப் 'பூச் சுற்றி' திரிவர். அடுத்த மனித உரிமை பேரவை கூட்டத் தொடர்வரை இது தொடரும்.
2009 இல் போர் மௌனிக்கப்பட்டதில் இருந்து இதுதான் நடைபெற்று வருகின்றது. தமிழர் விவகாரத்தில்; 'தமிழ்த்தலைமைத்துவங்களினாலோ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினாலோ புலம் பெயர் அமைப்புக்களினாலோ ஏன் வருடாவருடம் ஜெனிவாவில் கூடி தீர்மானம் நிறைவேற்றும் மனித உரிமைப் பேரவையினாலோ இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடம் ஏறும் அரசாங்கங்களின் போக்கினைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஒரேகுட்டையில்ஊறியமட்டைகள்
இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவாக இருக்கட்டும் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளான கோதாபய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவாகட்டும் அல்லது இவர்களுக்கு முந்தைய ஜனாதிபதிகளாகட்டும் பிரதம மந்திரிகளாகட்டும் எல்லோரும் தமிழர்விவகாரத்தில்ஒரேகுட்டையில்ஊறியமட்டைகளாகத்தான் உள்ளனர். உனக்கு நான் சளைத்தவன் அல்ல என்ற போக்கில் இவர்கள் ஒவ்வொருவரும் தமிழர் விவகாரத்தில் கடும் போக்காளர்களாகவே செயற்பட்டு வருகின்றனர். இந்தக் கடும் போக்கினைத் தடுத்து நிறுத்தும் சக்தி 'தமிழ் தலைமைகளிடமோ' அல்லது புலம் பெயர் தமிழ் அமைப்புக்களிடமோ அல்லது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திடமோ இல்லை. ஏன் சர்வதேசத்திடமும் இல்லை.ஆனால் இந்தச் சக்திகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ் மக்களை அழிப்பதற்கு இலங்கையுடன் கைகோர்த்து துணை நிற்கின்றனர்.
நாங்கள் அரசியல் அநாதைகள்'
எனவேதான் 'நாங்கள் அரசியல் அநாதைகள்'; என்ற வார்த்தை தமிழ் மக்களிடையே இன்று பரவலாக பேசப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கும் நிலையில் நிலத்திலும் எவரும் இல்லை. புலத்திலும் யாரும் இல்லை என்பதுதான் உண்மை.
ஓன்றுபட மறுக்கும் தமிழ் தலைமைகள்
நிலத்தில் அதாவது தாயகத்தில் தமிழ்த் தலைமைகளை ஒன்றிணைத்துவிட வேண்டுமென்பதில் பல்கலைக்கழக சமூகம் சமூக நலன் விரும்பிகள் புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பலதரப்பட்ட சமூக அமைப்புக்களும் காலத்துக்குக் காலம் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் அந்த அணைத்து முயற்சிகளையும் 'தமிழ்த் தலைமைகள'; வெற்றிகரமாக முறியடித்துவிட்டன.
கூட்டமைப்புக்குள்ளும் முரண்பாடு
.இந்தத் தமிழ் தலைமைத்துவங்கள் தமக்குள்ளும் முரண்பட்டு நிற்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னரான தமிழர் அரசியலில் தமிழ் மக்களின் அரசியல் விடி வெள்ளியாகத் தெரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய முரண்பாடு காரணமாவே காலத்துக்குக் காலம் கூட்டமைப்பில் இணைந்திருந்த கட்சிகள் பல வெளியேறக் காரணமாக இருந்தது.
தமிழரசுக் கட்சிக்குள் மாவை அணி சுமந்திரன் அணி
தமிரசுக் கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெயரில் அரசியலை முன்னெடுத்தமையினாலேயே இந்தப் பிளவுகளுக்கு வழி வகுத்தன. தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளேயே மாவை அணி சுமந்திரன் அணி என இரு அணிகள் உருவாகி பனிப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
புலம்பெயர் அமைப்புக்களிலும் பிளவு தாயகத்தில் இந்த நிலையெனில் புலம்பெயர்ந்தோர் மத்தியிலும் இதேநிலைதான். ஆளுக்கொரு பக்கமாக நிற்கின்றனர். இலங்கை அரசாங்கம் அடிக்கடி புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்வதும் பின்னர் அவர்களில் ஒருபகுதியினர் மீதான தடையை நீக்குவதும் பின்னர் தடைவிதிப்பதுமாக சிங்கள மக்களின் உணர்வுகளை கொதிநிலையில் வைத்திருப்பதற்கான நாடகத்தை மாறி மாறி ஆட்சிபீடமேறும் அரசாங்கங்கள் அரங்கேற்றி வருகின்றன.
2009 மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னர் இந்த அமைப்புகளில் பல மாறி மாறி பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு மீண்டும் பலமுறை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களின் பின்னர் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 16 அமைப்புகளையும் 424 நபர்களையும் தடை செய்தது.
நவம்பர் 20 அன்று நல்லாட்சி அரசாங்கம் எட்டு அமைப்புகள் மற்றும் அவற்றில் அங்கம் வகித்த 267 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியது. பின்னர் மீண்டும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஏழு அமைப்புகளையும் 389 நபர்களையும் தடைப் பட்டியலில் சேர்த்தது.
தற்போது 6 அமைப்புகளும் 316 நபர்களும் மீண்டும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது எதனைக் காட்டுகின்றது. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் ஒற்றுமையில்லை என்பதையே காட்டுகின்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நாடு கடந்த நிலையில் அரசாங்கத்தை நடத்தி வருகின்றது.
அப்படியானால் தமிழ்மக்களை ஒரு குடையின்கீழ் கொண்டுவரக் கூடிய தலைவன் அல்லது அமைப்பு இன்று இல்லை என்பதைத்தானே இந்த பிளவுகளும் பிரிவுகளும் காட்டுகின்றன.
எத்தனை அழிவுகள் பின்னடைவுகள் காட்டிக் கொடுப்புகள் இன்றும் தாயக நிலத்தில் வீசும் காற்றுடன் நிரந்தரமாகக் கலந்துள்ள மரண ஓலங்கள் போன்றவற்றை உணர்ந்த பிறகும் அனுபவித்த பிறகும் பிரிவுகள் பிளவுகள் முரண்பாடுகள் தமிழ் இனத்திற்கு வேண்டுமா என்று கேட்கத் தோன்றுகின்றது.
துரதிஷ்டவசமாக பிரிந்தும் பிளவுபட்டும் நிற்கும் சக்திகள் இதனை உணரத் தவறுவது ஏனோ?
2004 ஆம் ஆண்டு கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்தபோது
'தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை பலவீனப்படுத்துவது என்பது தமிழ் மக்களை வேருடன் பிடுங்கிச் சாய்ப்பதற்குச் சமன்'
என்று அன்று நான் பணியாற்றிய வீரகேசரி வாரவெளியீட்டில்; எழுதிய பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். அதனை வரலாறு இன்று நிரூபித்துள்ளது. இது தமிழ்த் தலைமைத்துவங்கள் அறியாத விடயமல்ல. அவ்வாறாயின் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்களுக்கான விடுதலை விமோசனம் என்ற பெயரில் இத்தனை அமைப்புகள் எதற்கு?
ஓன்றில் பிரிந்து நின்றால் பரவாயில்லை. ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்ற முன்வரவேண்டும். இல்லையேல் அணைத்து அமைப்புகளையும் கலைத்துவிட்டு ஒரு அமைப்பாக இயங்க முன்வர வேண்டும்.
தாயகத்தில் தமிழ்த் தலைமைகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் முன் நின்றவர்களில் ஒருவரான அரசியல் விமர்சகர் நிலாந்தன் கூறுகையில் தமிழ்த் தலைமைத்துவங்களை ஒன்றிணைத்துவிட வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர்களில் நானும் ஒருவன்.ஆனால் அது சாத்தியமாகாமல் போய்விட்டது.' என்று குறிப்பிடுகின்றார்.
பிரிந்து நிற்பவர்களை ஒன்றிணைப்பது இயலாத விடயமாக உள்ளது. எனவே 'வேற்றுமையில் ஒற்றுமை காணுங்கள்' என்று தமிழ்த் தலைமைகளிடம் பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் செயலாளரும் அரசியல் விமர்சகருமான ச.கிருபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு தாயகத்தில் உள்ள தமிழ்த் தலைமைகள் கூறப்போகும் பதில் என்ன?.
புலம் பெயர் தமிழ் அமைப்புகள் கூறப் போகும் பதில் என்ன?
தாயக தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைகளின் இத்தகைய போக்கு குறித்து என்ன கூற வருகின்றனர்.
புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் போக்கு குறித்து புலம்பெயர் தமிழர்கள் கூற வருவது என்ன?
மொத்தத்தில் தாயகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளும் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் அமைப்புக்களும் வேற்றுமைக்குள் ஒன்றுபட்டு பொது வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்ற முன்வராதுவிடில் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் இவர்களை நிராகரித்து தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களையும் ஒன்றிணைத்ததான பொது அமைப்பை நோக்கி தமிழ் மக்கள் நகர்ந்தாக வேண்டும்.
தமிழ் மக்கள் இத்தகைய அமைப்புக்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதன் மூலமே தமக்கான பாதையை தாமே வெட்டிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இல்லையேல் தமிழ்த் தேசியத்தை எழுத்தில்மட்டுமே பார்க்கக் கூடியதாக இருக்கும். தமிழ் இனத்தை வரலாற்று ஆவணங்களில் மாத்திரமே தேட வேண்டி வரும்.
தமிழ்த் தேசியத்தை 'நலமடித்துவிடும்' முயற்சி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியத்தை 'நலமடித்துவிடும்' முயற்சியில் தமிழர் தரப்பில் இருந்தே சக்திகள் களம் இறங்க்கப்பட்டு காய்கள் வெற்றிகரமாக நகர்த்தப்படுகின்றன.
வடக்கும் கிழக்கும் நிலத்தால் நிர்வாக ரீதியில் பிரிக்கப்பட்ட போதும் தமிழ்த் தேசிய உணர்வால் மக்கள் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தனர். கிழக்கில் இந்த உணர்வு ரீதியிலான பிணைப்பை நிர்மூலமாக்கிவிட சக்திகள் களம் இறக்கப்பட்டுள்ளன. இந்தச் சக்திகள் வெற்றி பெற்றால் தமிழ்த் தேசியம் வடக்குடன் மட்டுப்படுத்தப்பட்டுவிடும். இதற்கான பொறுப்பை 'தமிழ்த் தலைமகளே' ஏற்க வேண்டும்.
தீர்வு குறித்த யோசணைகள் இன்றி தமிழ்த் தலைமைகள்
அதேவேளையில் இந்த 'தமிழ்த் தலைமைகளிடம், அது தாயகத்திலாகட்டும் புலம்பெயர்ந்தோர் மத்தியிலாகட்டும் தமிழர் விவகாரத்திற்கான தீர்வு குறித்து அவர்கள் முன் வைக்கும் தீர்வு யோசனை என்ன? அதற்கான பதில் தீர்வு யோசனைகுறித்த திட்டவட்டமான பொதி எதுவும் இன்றியே காலத்தைக் கடத்தி வருகின்றனர் என்பதைத்தவிற வேறு ஒன்றும் இல்லை.
நாற்காலிகளுக்கான போட்டியே
தாயக மண்ணைப் பொறுத்து தமிழ்த் தலைமைகள் நாடாளுமன்ற மாகாண சபைகளுக்கானக்கான தேர்தலில் தமிழர் பிரதேசத்தில் கைப்பற்றக் கூடிய நாற்காலிகளுக்கான சண்டையாகவே இருக்கின்றது. எனவேதான் தமிழர் விவகாரத்துக்கான தீர்வு ஒரு அங்குலம்தானும் நகர முடியாதுள்ளது.
புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்து அவர்களும் தீர்வை நோக்கி நகர முடியாது 'குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடிக் கொண்டிருக்கின்றனர்';.
இந்தப் போக்கில் மாற்றம் கண்டாக வேண்டும்.
ஒட்டு மொத்த தமிழ் மக்களும் விழித்துக் கொள்ளாவிடில் 'தமிழ்த் தேசிய வியாபாரிகள்' தமிழ்த் தேசியத்திற்கு மாத்திரம் அல்ல தமிழ் இனத்திற்கும் சமாதி கட்டிவிடுவர்.
No comments