Breaking News

தெற்கின் அலையில் சிக்கிவிடாது! இனத்தின் இருப்பை உறுதிசெய்வோம்!! மயூரன்


தெற்கின் மாற்றம் என்ற வரயறைக்குள் தமிழ்மக்களின்  தேவைகளை அடகுவைக்காமல் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பை மனதில் நிறுத்தி வாக்களிக்குமாறு முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட வேட்ப்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடகக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

தெற்கில் இன்று அரசியல் மாற்றம் ஒன்று உருவாகியுள்ளது.அந்த மக்கள் மாற்றம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்து அநுரவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.வடகிழக்கிலும் அவ்வாறான ஒரு மாற்றம் வரவேண்டும் என்று பலரும் சிந்திக்கின்றார்கள். அந்த மாற்றத்திற்குள் பலவிடயங்கள் இருக்கிறது. 

நாடு பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்து ஊழல்வாதிகளால் சூறையாடப்பட்டுள்ளது. அந்தவகையில் நாட்டில் ஒரு புதியயுகத்தினை ஏற்ப்படுத்துவதற்காக சிங்கள மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். அதனை நாம் வரவேற்கின்றோம். அதற்கான பங்களிப்புக்களை வழங்குவதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்.  

இதேவேளை தெற்கு சிங்களமக்கள் விரும்புகின்ற மாற்றமும் வடகிழக்கு தமிழ்மக்களின் எதிர்பார்ப்புக்களும் ஒன்றல்ல. இரண்டையும் நாம் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. இலஞ்சத்தையும் ஊழலையும் அகற்றினால் தமிழ்மக்கள் நின்மதியாக வாழமுடியுமா. அல்லது அதனை மாத்திரம் நாம் மாற்றம் என்று கூறமுடியுமா. 

இன்று வடகிழக்கு தமிழர்பகுதிகளில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்பரம்பல் செயற்பாடுகள் தமிழ்ப்பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது. சமகாலத்தில் திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஒரு தமிழ்பிரதிநிதித்துவத்தை பெறுவதே கடினம் என்ற நிலை  ஏற்ப்பட்டுள்ளது. 

வன்னி மாவட்டத்திலும் இந்த
நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே தமிழ்மக்களின் இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க வேண்டியபொறுப்பு எம் அனைவர் முன்னும் இருக்கிறது. இது தொடர்பாக நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். 

ஏற்கனவே அதிகளவான தமிழ்மக்கள் புலம் பெயர்ந்து சென்றுள்ளமையால் தமிழ்பிரதிநிதித்துவம் குறைவடைந்து செல்லும் நிலமையினை காண்கின்றோம். இந்நிலையில் மாற்றத்தினை விரும்பி நீங்கள் அளிக்கின்ற வாக்குகளால் எமது பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து சிங்கள பிரதிநிதிகளே பாராளுமன்றுக்கு செல்வர். அவர்களுக்கு தமிழர்களின் பிரதான பிரச்சனைகளே தெரியாது. அவர்கள் எமக்காக பேசுவார்கள் என நம்பமுடியுமா. 

நாம் ஈழவிடுதலை போராட்டத்தில் எத்தனை ஆயிரம் போராளிகளை இழந்துவிட்டோம். எத்தனை உயிர்களை இழந்திருக்கின்றோம். பலர் அங்கவீனமுற்று அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். பலர்காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.இனப்பிரச்சனைக்கு தீர்வில்லை.
இவை தொடர்பாக சிங்கள பிரதிநிதிகளால் பாராளுமன்றில் குரல்கொடுக்க முடியுமா. இல்லை. அல்லது சர்வதேசத்திற்குத்தான் தெரியப்படுத்த முடியுமா. 

இந்த நிலைமையில் நாம் தேசிய கட்சிகளுக்கு அளிக்கின்ற வாக்கானது அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதுடன் 50 வருடங்களுக்கு மேலாக நீடித்துவரும் விடுதலைவேட்கையினை நீர்த்துப்போகச்செய்யும் நிலையினை ஏற்ப்படுத்தும். 

எனவே தெற்கில் ஏற்ப்பட்ட மாற்றத்திற்கான அலையில் தமிழ்மக்கள் சிக்கிவிடாது தமிழ்ப்பிரதேசங்களின் இருப்புக்களையும், பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை உணரவேண்டும்.

தமிழ்மக்களின் குரலாக ஓங்கிஒலிக்கும் பிரதிநிதிகளை பாராளுமன்றுக்கு அனுப்பவேண்டிய அவசியம் தொடர்பில் தாயகமக்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்சொந்தங்களும் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.

தொடர்ச்சியான தேர்தல்களில் வடகிழக்கு தமிழ்மக்கள் சலுகைஅரசியலை புறம்தள்ளி உரிமைஅரசியலை பேசுகின்ற தமிழ்த்தேசிய கட்சிகளுக்கே தமது 
ஏகோபித்த ஆதரவினை  வழங்கிவந்திருக்கின்றனர். 

எனவே இந்த தேர்தலிலும் தடம்மாறாது தமிழ்த்தேசியத்தின் இருப்பை பாதுகாப்பதற்கு ஒற்றுமையோடு அணிதிரளவேண்டும்என்று தமிழ்மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.


No comments