வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் ரோவ்மேன் பவல் 37 ஓட்டங்களையும், குடாகேஷ் மோடி 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மஹேஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
அதனை தொடர்ந்து, 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஷ் அதிகபட்சமாக 68 ஓட்டங்களையும், குசல் பெரேரா 55 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றதுடன், பெதும் நிஸ்ஸங்க 39 ஓட்டங்களையும் பெற்றார். இதற்கமைய மூன்று போட்டிகள் கொண்ட இந்த ரி20 தொடரை இலங்கை அணி ஒன்றுக்கு இரண்டு என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
அத்துடன், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இலங்கை அணி கைப்பற்றியுள்ள முதலாவது ரி20 தொடரும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
No comments