Breaking News

இனவிகிதாசார அடிப்படையில் தெரிவுகள் அமைந்தாலே அடக்குமுறைகளை எதிர்கொள்ள முடியும் -ப.சத்தியலிங்கம்!


வன்னிமாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் இனவிகிதாசார அடிப்படையில் தெரிவுகள் அமையாவிடில் நாங்கள் ஏற்கனவே எதிர்கொள்கின்ற குடியேற்றம், காணிஅபகரிப்பு, போன்ற அடக்குமுறை
செயற்ப்பாடுகளை  தடுக்க முடியாமல் போகும். என்று முன்னாள் வடமாகாணசுகாதார அமைச்சரும் வன்னிமாவட்ட தமிழரசுக்கட்சியின் வேட்பாளருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

வன்னிமாவட்டத்தில் ஏற்கனவே பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தாத ஒன்பதுபேர் இம்முறை வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.வன்னியில் காணி அபகரிப்பு இடம்பெறுகின்றது,இனம்பரம்பலை மாற்றியமைக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது அவற்றுடன் பொருளாதார ரீதியாக எமது மக்கள் நலிவடைந்துள்ளனர். 

எனவே இம்முறை இங்கு தெரிவுசெய்யப்படக்கூடிய பாராளுமன்றஉறுப்பினர்கள் எமது அரசியல் தீர்வுப்பயணத்தில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதுடன் அதனை நாட்டிற்குள்ளும் சர்வதேசத்திற்கும் எடுத்துச்சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அந்தவகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான தீர்வுகளை பெற்றுத்தரக்கூடிய வல்லமை உள்ளவர்களை தெரிவுசெய்யவேண்டிய பாரியபொறுப்பு மக்களிடம் உள்ளது. 

பாராளுமன்றுக்கு சென்று மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யாதவர்களையும், சர்வதேசரீதியாக எமது பிரச்சனைகளை வெளிக்கொணர முடியாதவர்களையும் மீண்டும்தெரிவுசெய்து விட்டு அவர்களை குறைகூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.எனவே தகுதிவாய்ந்தவர்களை தெரிவுசெய்யவேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன்.

நாட்டில் இருந்த மாகாணஅரசுகளில் வடமாகாணசுகாதார அமைச்சு மிகவும் சிறப்பாக செயற்ப்பட்டது. எனது தலைமையில் பல சுகாதாரஅபிவிருத்தி திட்டங்களை நாங்கள் கொண்டுவந்திருக்கின்றோம். வன்னியில் மாத்திரம் 18 கிராமிய வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நவீனமருத்துவ வசதிகளை ஏற்ப்படுத்தினோம்.
இதுபோல பலவிடயங்களை சொல்லலாம். 

தற்போது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள அரசியல் மாற்றமானது இலங்கையின் ஊழலுக்கு எதிராகவும் நிர்வாக கட்டமைப்புக்களை மாற்றுவதற்கான ஒரு மாற்றமாகவும் காணப்படுகின்றது. அந்த மாற்றம் ஏற்ப்படும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது, மக்களிடத்திலும் உள்ளது. எனவே இலங்கையின் எதிர்காலம் இந்த ஊழலற்ற சிறந்த நிர்வாகம் ஊடாக மாத்திரமே மாறக்கூடிய சந்தர்ப்பம்உள்ளது. அந்த மாற்றத்தினூடாக இணைந்து பயணிக்ககூடிய பிரதிநிதிகளை எமது மக்களும் தெரிவுசெய்யவேண்டிய தேவை இருகிறது. 

அப்படி தெரிவுசெய்யப்படும்பிரதிநிதிகள்தமிழ்மக்களின் நீண்டகால பிரச்சனைகளில் பங்கு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. 

வன்னியில் குறைந்தது நான்கு தமிழ்பிரதிநிதிகள் பாராளுமன்றம் செல்வதற்கான வாக்குப்பலம் எம்மிடம் உள்ளது. வாக்குகளை சிதறடிப்பதற்காக பல கட்சிகள் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளது. எனவேஇந்த மண்ணிலே இயங்காமல் புதிதுபுதிதாக தேர்தல் காலங்களில் வருகின்ற கட்சிகளுக்கு வாக்குகளை செலுத்தி எமது வாக்குப்பலத்தை சிதறடிக்காதீர்கள் என்ற கோரிக்கையினையும் முன்வைக்கிறேன். 

வன்னியின் மூன்று மாவட்டங்களில் இருந்தும் மக்கள் பிரதிநிதிகள் இம்முறை செல்லவேண்டும். தமிழரசுக்கட்சியான நாங்கள் வீட்டுச்சின்னத்திலே ஆளுமையுள்ள வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளோம்.  
நான் ஆறாம் இலக்கத்தில் போட்டியிடுகின்றேன்.  நீங்கள் தெரிவுசெய்பவர்களில் ஒருவராக என்னையும் தெரியவேண்டும் என்று அன்பாக கேட்டுக்கொள்கின்றேன். 

வன்னியில் இம்முறை இனவிகிதாசார அடிப்படையில் தெரிவுகள் அமையாவிடில் நாங்கள் ஏற்கனவே எதிர்கொள்கின்ற குடியேற்றம் காணிஅபகரிப்பு, வளங்கள் சூறையாடப்படும் செயற்ப்பாடுகளை  தடுக்க முடியாமல் போகும். 

அத்துடன் தேர்தலின் போது முகவரியற்ற போலிப்பிரச்சாரங்களை முன்வைப்பவர்களின் பின்னணியை பார்த்தால் அவர்கள் சுத்தமானவர்களாக தெரியவில்லை. நாங்கள் அதற்காக பயப்படவில்லை. அப்படியான பொய்பிரச்சாரங்களுக்கு மக்கள்  இடம்கொடுத்துவிடாமல்நேர்மையானவர்களை தெரிவுசெய்யவேண்டும். என்றார்.

No comments