Breaking News

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் மரணம்- வைத்தியசாலையின் கவனயீனம் என குற்றசாட்டு



மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் இன்றைய தினம்(19) பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம் தாயே இன்றைய தினம்(19) செவ்வாய்கிழமை மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.



முன்னதாகவே குறித்த பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருந்த போதிலும் உரிய விதமாக கவனிக்கப்படவில்லை எனவும் பெண் தனக்கு சிசேரியன் செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் வைத்தியர்கள் இயற்கை முறையில் பிரசிவிக்க முயற்சித்த நிலையில் தாயும் பிள்ளையும் மரணமடைந்துள்ளதாக  தெரிவிக்கப் படுகின்றது.

வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே குறித்த மரணம் இடம் பெற்றுள்ளதாகவும் மரணம் அடைந்த விடயத்தை நீண்ட நேரமாக உறவினர்களுக்கு சொல்லாமல் மறைத்ததாகவும் உயிர் இழந்த பெண்ணின் உடலை கூட பார்பதற்கு பெற்றோரை அனுமதிக்கவில்லை எனவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பெண்ணின் மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன என தெரிவிக்கும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றுக்கொள்ள போவதில்லை என உறவினர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் பொதுமக்கள்,பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூடியிருந்த போதிலும் வைத்தியசாலை பணிப்பாளர், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ சம்பவ இடத்திற்கு நீண்ட நேரம் வருகை தரவில்லை எனவும்  அவருடைய தொலைபேசியும் இயங்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பிரசவ விடுதியில் பணிபுரியும் சில ஊழியர்கள் தொடர்சியாக கவனயீனமாக செயற்படுவதாகவும் வேலை நேரத்தில் நாடகங்கள் பார்பதாகவும்,தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதாகவும், பிரசவ விடுதிக்குள் நாய்கள் நிற்பதாகவும் அவற்றை கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

 இவ்வாறான பின்னனியில் மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவ விடுதியில் கவனயீனத்தால் இவ்வருடத்தில் இடம் பெற்ற மூன்றாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.




No comments