வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ் மொழித் தின விழா
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் தமிழ் மொழித் தின விழா மாணவர்களின் பல்வேறு படைப்புக்களுடன் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலையின் முதல்வர் இ.தமிழகன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வவுனியா தெற்கு வலய தமிழ் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் த.மதியழகன் பாடசாலையில் வளர்ச்சி தொடர்பில் உரையாற்றிருந்தார்.
அவர் தனது உரையில், வவுனியா மாவட்டதிலுள்ள பாடசாலைகளில் நகர்புற பாடசாலைகளை விஞ்சியவாறு கற்றல், கற்பித்தல், இணைப்பாடம் என பல்துறைசார் செயற்பாடுகளிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது. அண்மைக்காலமாக இப் பாடசாலை மாணவர்களின் ஆளுமை சார் பண்புகளையும், புதிய சாதனைகளையும் கண்டு புழகாங்கிதம் அடைகின்றேன் எனத் தெரிவித்தார்.
இதன்போது, மாணவர்களது தனி, குழு நிகழ்வுகளும், பேச்சு, கவிதை, பாடல்கள், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், வெற்றியீட்டிய மாணவர்களுக்கான வெற்றிச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், வவுனியா தெற்கு வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் த.நிறைமதி, ஒய்வு பெற்ற ஆசிரியர்களான திருமதி இ.நித்தியானந்தம், திருமதி சி.கலைமதி, பாடசாலை உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை, இப் பாடசாலயானது இறுதியாக நடைபெற்ற க.பொ.சாதாரண தரப் பரீட்சையில் 10 மாணவர்கள் 9ஏ சித்திகளையும், 5 மாணவர்கள் 8ஏபீ சித்திகளையும் பெற்றுள்ளதுடன், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஒரு மாணவன் பொறியில் துறைக்கும், 2 மாணவர்கள் மருத்துவ துறைக்கும், 5 மாணவர்கள் முகாமைத்துவ துறைக்கும், 12 மாணவர்கள் கலைத்துறைக்கும் தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments