Breaking News

தேர்தல் பிரசார அலுவலகங்கள் குறித்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு



அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார அலுவலகங்கள் நாளை (12) நள்ளிரவுக்குள் அகற்றப்படாவிட்டால் அவற்றை உடனடியாக அகற்றுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடளுமன்ற தேர்தலின் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் மௌன காலம் நடைமுறையில் இருக்கும் எனவும், நாளை (12), நாளை மறுதினம் (13ஆம் திகதி) மற்றும் 14 ஆம் திகதிகளில் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள முடியாது எனவும் அத்தோடு அந்த சில நாட்களில் ஊடகங்களாலும்  பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காலப்பகுதியில் ஊடகங்களில் பணம் செலுத்தி விளம்பரங்களை வெளியிடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தந்த அரசியல் கட்சி அல்லது தொகுதிக்கான சுயேச்சைக் குழுவிற்கு ஒரு மத்திய தேர்தல் அலுவலகம் பராமரிக்கப்படலாம் என்றும்இ ஒரு தொகுதியில் ஒரு அலுவலகம் மற்றும் வேட்பாளரின் வீட்டை அந்தந்த வேட்பாளரின் அலுவலகமாகப் பயன்படுத்தலாம் என்றும் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்

அந்த அலுவலகங்கள் எதுவும் வேட்பாளரை ஊக்குவிக்கும் விதத்தில் எந்தவித பிரச்சாரப் பணிகளையும், அலங்காரங்களையும் செய்யக்கூடாது இது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வாக்களிப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றருக்குள் பிரசார அலுவலகம் நடத்தப்பட்டால் அதனை வாக்களிப்பு தினத்தன்று அகற்ற வேண்டும் எனவும், குறித்த பகுதியில் வேட்பாளரின் வீடு அமைந்திருந்தால் அங்கு அலங்காரங்களை பராமரிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments