முல்லைத்தீவில் நாயிற்கு மரண தண்டனை வழங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி
ஒட்டுசுட்டான் இணக்க சபையில் நேற்று முன்தினம் (25) வழங்கப்பட்ட கொடூரமான தீர்ப்பு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, சசிதா என்ற பெண், தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக காவல்துறையில் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணை ஒட்டுசுட்டான் இணக்கசபைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்கள் நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நாயை பெற்ற பெண், நாயை தூக்கிலிட்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் மக்கள் தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இந்தநிலையில், சமூக ஊடகப் பதிவின் பேரில் 48 வயதுடைய குறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments