Breaking News

பேராசிரியர் அம்பலம் புஸ்பந்தன்

பேராசிரியர் அம்பலம் புஸ்பநாதன் 1964ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி 
யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை அல்வாய் நகரில் உள்ள வதிரிக் கிராமத்தில் 
பிறந்தார். யாழ்/ தேவரையாளி இந்துக்கல்லூரியில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை 
தனது பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்தார். 

1989இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக இளங்கலைப் 
பட்டத்தையும், 1996இல் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் படிப்பாக 
முகாமைத்துவத்தில் டிப்ளோமாவையும், 2008இல் சீனாவின் சியாமென் 
பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். 
2006இல் சீனாவின் சியாமென் பல்கலைக்கழகத்தில் சிறந்த சர்வதேச மாணவர் 
ஊக்குவிப்பு விருது அவருக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியர் புஸ்பநாதன் அவர்கள் 1994ஆம் ஆண்டு முதல் வடமாகாணத்தின் 
இணைக்கப்பட்ட பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராக தனது சேவையினை 
ஆரம்பித்து, யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் தொடர்ச்சியான தனது 
சேவையினையாற்றி இன்றைய வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் 
பீடத்தின் மூத்த விரிவுரையாளராக இற்றைவரை கடமையாற்றிய அர்ப்பணிப்புள்ள கல்விமானாவார்.

பேராசிரியர் 2010ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை வியாபாரப் பொருளியல்
துறையின் துறைத்தலைவராகவும், 2013ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை 
வியாபாரக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாகவும் தனது கல்வி நிர்வாகப் பணியினைத் 
திறம்பட ஆற்றினார். 

மேலும் தனது சேவைக்காலம் முதல் 2024ஆம் ஆண்டு வரை 
வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு நிர்வாக அலகுகளில் பணிப்பாளராகவும் 
சிறந்த ஆலோசகராகவும் திகழ்ந்தார். 

பேராசிரியர் அவர்கள் தொழில் முயற்சியாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் 
முகாமைத்துவத் துறைகளில் குறிப்பிடத்தக்க தனது பங்களிப்பினை வழங்கியதுடன், 
2021ஆம் ஆண்டு முகாமைத்துவத்தில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்று வியாபார 
கற்கைகள் பீடத்திற்கும் வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் பெருமையை ஈட்டித்தந்த 
மகானாவார். 

அன்னாரினால் வழங்கப்பட்ட சேவைகள் அவரது நாமத்தை என்றும் இச் 
சமூகத்திலும் பல்கலைக்கழகத்திலும் நிலைத்திருக்கச் செய்யும். 
அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் 
வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தின் சார்பாக எமது ஆழ்ந்த 
அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 
 
வியாபாரக் கற்கைகள் பீடம் 
வவுனியாப் பல்கலைக்கழகம் 

No comments