Breaking News

அரசியலிலிருந்து விலகப் போகும் அர்ச்சுனா எம்.பி : வெளியான அதிரடி அறிவிப்பு

அரசியலில் இருந்து விரைவில் விலகப் போவதாக யாழ்  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நேற்று (29) அனுராதபுரத்தில் வைத்து சிங்கள ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அரசியல் கலாசாரத்தின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. நான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை.

தற்போது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளேன்”  என தெரிவித்தார்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு அனுராதபுரத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் (29) யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் வைத்து அனுராதபுரம் காவல்துறையினரால் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.

பின்னர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் பிரபலமான அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலில் ஊசி சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்திலும் அர்ச்சுனா பல்வேறு சர்ச்சைக்குரிய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நாளைய யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தமை தொடர்பில் யாழ் நீதிமன்றத்தால் அர்ச்சுனாவுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments